இராணுவ வசமுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – சார்ள்ஸ் எம்.பி.

முக்கிய செய்திகள் 2

முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டபய ராஜபக்ஷ கடற்படை முகாம் சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என்ற அச்ச நிலை தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இராணுவத்தினர் வசமுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள் முறையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இராணுவத்திற்கு கட்டளையிடும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. ஆட்சியாளர்கள் இராணுவத்தினரின் தேவைக்காக செயற்படுகிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டு, நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு துறைக்கு மாத்திரம் தற்போது அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 373.05 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மாத்திரம் 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை ஆக்கப்பூர்வமான செயற்பாடல்ல, சிறிய தீவு நாடான இலங்கையில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை பொருளாதார மீட்சிக்கு சாதகமாக அமையாது.

ஆட்சியாளர்கள் இராணுவத்தோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் உள்ளமையால் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு தாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நகரங்களிலும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

மன்னார் நகரின் பிரதான வாயிலில் இவ்வாறு சோதனை சாவடி அமைக்கப்பட்டது, ஏனைய நகரங்களில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகள் குறுகிய காலத்திற்கு பின்னர் நீக்கப்பட்டது.

ஆனால் மன்னார் நகரின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி நீக்கப்படவில்லை.இன்றும் செயல்பாட்டில் உள்ளது.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காகவே இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள், ஆனால் இந்த சோதனை சாவடியினால் மன்னார் நகரத்திற்கு வரும் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சிறுவர் பூங்காவை அமைக்க நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்த சோதனை சாவடியினால் தமது நிர்மாணிப்பு பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,ஆகவே இந்த சோதனை சாவடியை நீக்க வேண்டும் அல்லது பிறிதொரு இடத்திற்கு இந்த சோதனை சாவடியை இடம்மாற்றம் செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இந்த சபை ஊடாக வலியுறுத்துகிறேன்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான காணிகள் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மாத்திரம் இராணுவத்தினர் 1500 ஏக்கர் காணிகளை தம்வசப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டபய ராஜபக்ஷ கடற்படை முகாமை அமைப்பதற்கு 671 ஏக்கர் காணி சுபீகபரிக்கப்பட்டுள்ளது.

இந்த 671 ஏக்கர் காணிகள் தமிழ் மக்களின் பூர்விக காணிகளும் உள்ளடங்குகின்றன.கடற்படை முகாமை அமைப்பதற் மக்கள் தமது விருப்பத்துடன் காணிகளை வழங்கியுள்ளதாக கடற்படை குறிப்பிடுகிறது.

கோட்டபய ராஜபக்ஷ கடற்படை முகாமை நிர்மாணிப்பதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை அளவீடு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.671 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தமிழ்களின் பூர்வீக காணிகள் அவரவருக்கு ஒப்படைக்க வேண்டும்.

வடமாகாணத்தில் வாழ்பவர்கள் தமது சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் காணிகளில் இராணுவத்தினர் குடிகொண்டு,விவசாயம் செய்து அவர்கள் விளைச்சலை மருதனார்மடம் சந்தைக்கு கொண்டு செல்கிறார்கள்,ஆனால் உரிமையுள்ள தமிழர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டபய ராஜபக்ஷ கடற்படை முகாம் சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என்ற அச்ச நிலை தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது, இராணுவத்தினர் வசமுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை முறையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இராணுவத்திற்கு கட்டளையிடும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை,ஆட்சியாளர்கள் இராணுவத்தினரின் தேவைக்காக செயற்படுகிறார்கள் என்றார்.