தேர்தல் தோல்வி வழக்கு: பிரேஸில் ஜனாதிபதியின் கட்சிக்கு 155 கோடி ரூபா அபராதம்

முக்கிய செய்திகள் 3

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ தரப்பினால், இத்தேர்தல் பெறுபேற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அந்நாட்டின் தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன் இவ்வழக்கை தாக்கல் செய்தமைக்காக, போல்சனரோ தரப்புக்கு நீதிமன்றத்தினால் பெருந்தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளராக விளங்குபவர் பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ.

கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் 2 ஆவது சுற்றில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவிடம் ஜெய்ர் போல்சனரோ தோல்வியடைந்தார்.

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்ததைப் போலவே, ஜெய்ர் போல்சனரோவும் தோல்வியை முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.

இத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 280,0000 வாக்களிப்பு இயந்திரங்களில் சில இயந்திரங்கள் கோளாறுகளைக் கொண்டிருந்ததாகவும் இதனால், ஜனாதிபதி போல்சனரோ 2 ஆவது தடவையாக வெற்றியீட்ட முடியாமல் போனதாகவும் கூறி போல்சனரோவின் லிபரல் கட்சி வழக்குத் தாக்கல் செய்தது. தேர்தல் பெறுபேற்றை ரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்தை அக்கட்சி கோரியது.

இது தொடர்பான மேலதிக ஆதாரங்களை நீதிமன்றம் கோரியது. ஆனால், அக்கட்சி அத்தகைய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.

அதையடுதது, இவ்வழக்கை பிரேஸிலின் தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்துடன், இது மோசமான நம்பிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என விமர்சித்த நீதிபதி அலெக்ஸாண்ட்ரா டி மொராயெஸ், ஜெய்ர் போல்சனரோவின் லிபரல் கட்சிக்கு 22.9 மில்லியன் பிரேஸில் ஹேயிஸ் (சுமார் 155 கோடி இலங்கை ரூபா, சுமார் 35 கோடி இந்திய ரூபா, 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதமும் விதித்தார்.

பிரேஸில் ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி லூலா டா சில்வா பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.