ஓமான் ஆட்கடத்தல் பிரதான சந்தேகநபருக்கு மீளவும் விளக்கமறியல்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

துபாய் மற்றும் ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துபாய் மற்றும் ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர் கடந்த 19ஆம் திகதி காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 அகவையுடைய குறித்த நபர் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறார்களுக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளார்.

சந்தேகநபர் தம்புள்ளை பிரதேசத்தில் 6 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துபாய் - ஓமானுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரின் உள்ளூர் முகவர் (தரகர்) ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால் அவிசாவளையைச் சேர்ந்த 45 வயதுடைய குறித்த சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 21ஆம் திகதி காலை அவர் கொழும்பு - கோட்டையிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.