பேஸ்புக் நண்பனால் நகை, பணம் திருட்டு

முக்கிய செய்திகள் 1

கண்டி, கட்டுகஸ்தொட்டயில் உள்ள வீடொன்றின் கூரை திருத்தவேலைக்குச் சென்ற ஒருவர் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகஸ்தொட்ட, ஹல்ஒலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வீட்டின் உரிமையாளர் அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளார்.

சில காலமாக தனது முகநூல் நண்பராக இருந்த ஒருவரை, வீட்டின் மேற்கூரை திருத்தவேலைக்காக வரவழைத்துள்ளார்.

குறித்த நபர் வீட்டின் கூரையில் திருத்தவேலை செய்துகொண்டிருந்த போது, அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக வீட்டு உரிமையாளர் தனது தனிப்பட்ட வேலையின் நிமித்தம் வெளியே சென்றுள்ளார்.

வீட்டு உரிமையாளர் வீடு திரும்பியபோது, அலுமாரி அறையில் குறித்த நபர் இருப்பதைக் கண்டுள்ளார். சந்தேகம் ஏற்பட்ட வீட்டு உரிமையாளர், குறித்த நபரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்து நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் கடுகஸ்தொட்ட பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.