இந்தியாவுக்கு அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதிகபட்சமாக தினேஷ் சந்திமல் 57 ஓட்டங்களை இலங்கை சார்பில் பெற்றுக் கொடுத்தார்.

இந்திய தரப்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்த, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி சார்பில், முரளி விஜய் 128 ஓட்டங்களையும், புஜாரா 143 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கோலி 267 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 213 ஓட்டங்களையும் குவித்ததுடன், ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு சதமடித்து 102 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.

இதற்கமைய, இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் நேற்று பிற்பகல் ஆரம்பித்தது. இந்தநிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று 166 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது.

அந்த அணி சார்பில் நிதானமாக ஆடிய, தினேஸ் சந்திமால் மாத்திரம் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் அரைச்சதம்கூட பெறாது சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறி இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.

மேலும் இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களையும், இசாந் சர்மா, ரவீந்திர ஜடெஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு