அமிதாப் பச்சனின் அடையாள பண்புகளை அனுமதியின்றி பயன்படுத்த மேல்நீதிமன்றம் தடை

முக்கிய செய்திகள் 3

இந்தியாவின் முன்னணி பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனின் குரல், உருவம், பெயர் அல்லது அவருடன் பிரத்தியேகமாக அடையாளம் காணக்கூடிய வேறு எந்தப் பண்புகளையும் அனுமதியின்றி பயன்படுத்த புதுடெல்லி மேல்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'கேபிசி லொத்தர்' மோசடிக்கு பின்னால் உள்ள ஒருவர் உட்பட பலர், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தனது குரலை பயன்படுத்துவதை ஆட்சேபித்து அமிதாப் பச்சன் தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

80 வயதான அமிதாப் பச்சன் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கவுன் பனேகா க்ரோர்பதியின் தொகுப்பாளராக செயற்படுகிறார். இவர் நன்கு அறியப்பட்ட ஆளுமை என்பது மறுக்க முடியாது.

இந்த நிலையில் அவருக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால் ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் அவப்பெயரை சந்திக்க நேரிடும் என்றும், தமது உத்தரவில் நீதிபதி நவீன் சாவ்லா கூறியுள்ளார்.

இதேவேளை பச்சனின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளடக்கத்தை வழங்கும் இணையதளங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த லொத்தரைத் தவிர, இணைத்தளங்களின் டொமைன் பெயர்கள் நடிகரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பிரதிவாதிகளில் ஒருவர் 'கேபிசி லொத்தர்களை' விளம்பரப்படுத்துவதற்காக நடிகரின் படத்துடன் வாட்ஸ்அப்பில் செய்திகளை பரப்புவதாகக் கூறப்படுகிறது.

இது 'கவுன் பனேகா க்ரோர்பதி' பொது மக்களுக்கு லொத்தர் பரிசுகளை வழங்குவதாக பொதுமக்களை ஏமாற்றுகிறது என்றும் வாதியின் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பிரதிவாதி, தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்களுக்காக பச்சனின் படத்துடன் கூடிய பொது அறிவு வினாடி வினா புத்தகத்தை விற்பனை செய்கிறார் என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

இந்தநிலையில் வழக்கில் இடைக்கால தடையுத்தரவை வழங்கிய நீதிபதி, விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைத்தார்