முட்டையின் விற்பனை விலையில் மீண்டும் மாற்றம்?

முக்கிய செய்திகள் 2

கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும்போது தற்போதைய விலைக்கு அமைய முட்டை ஒன்றை விற்பனை செய்யக்கூடிய சரியான விலையை ஒரு வாரத்துக்குள் வழங்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வாவினால் நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, குறித்த ஒழுங்குவிதி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதனை அடுத்து 2022.05.10 திகதியிலான 2300/12, 2022.05.06 திகதியிலான 2278/21, 2022.06.24 திகதியிலான 2285/19, 2022.10.21 திகதியிலான 2302/31 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்களுக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பில் அரசங்க நிதி பற்றிய குழுவின் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் அபிவிருத்திக்கு வினைத்திறனான வகையில் தயாரிக்கப்பட்டதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் கருத்தில் கொள்வது பொருத்தமானது என குழு உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

சீட்டாட்டத் தொழில் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை இல்லாமை காரணமாக எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. உலகில் எந்தவொரு நாட்டிலும் சீட்டாட்டத் தொழில் ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்று இல்லாமல் சீட்டாட்டத் தொழிலுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை என குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இதுவரை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்தப்படும் வரித்தொகைக்கு மேலதிகமாக சீட்டாட்டத் தொழில் தொடர்பில் செயற்படுவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை எனவும் அதன் ஆரம்ப கட்டமாக இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த சீட்டாட்டத் தொழிலுடன் தொடர்புடைய வரி செலுத்தப்படுகின்றதா, அதன் மூலம் எவ்வளவு வரிகள் அரசுக்கு அறவிடப்பட்டுள்ளது அல்லது இல்லை என்பது தொடர்பில் புரிதலொன்று இல்லாமை, பதிவு செய்யப்பட்டுள்ள 4 சீட்டாட்ட தொழில்களுக்கு மேலதிகமாக நடத்தப்படும் சீட்டாட்ட தொழில் தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை உள்ளிட்ட அதனுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, இது தொடர்பில் ஒப்பீடு ஆய்வொன்றை மேற்கொண்டு மீண்டும் கருத்தில் கொள்ள அரசங்க நிதி பற்றிய குழு தீர்மானித்தது.

2022 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழான கட்டளைகளும் இதன்போது கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. எனினும், கொள்வனவாளர்கள், உப ஒப்பந்த முகாமைத்துவத் திட்டத்துக்கு அமைய முற்பணங்களை செலுத்தியுள்ள பின்னணியில் கூட்டு ஆதனக் குடியிருப்பு விடுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக ஏற்படும் சிக்கல்கள் காரணமாக பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குழு உறுப்பினர்கள் அரச அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர்.

மேலும், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், 2012 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, 2022 ஒதுக்கீட்டு (திருத்த) சட்டம் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.