சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

முக்கிய செய்திகள் 3

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா உலக நாடுகளுக்கு பரவ காரணமாக இருந்தது சீனா. அங்குள்ள உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக கொரோனா தோன்றியது.

பின்னர் அங்கிருந்து உலகின் பிற நாடுகளுக்கு பரவி கோடிக்கணக்கானோரை பாதித்து, லட்சக்கணக்கான உயிர்களையும் பறிந்தது. எனினும் கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த கொடிய வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன.

ஆனால் சீனாவே அந்த தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்கிற நிலையை அடைய வேண்டும் என்பதில் அந்த நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த கொள்கையின் அடிப்படையில் சீன அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால் அதை மீறியும் சீனாவில் அவ்வப்போது கொரோனா தொற்று எழுச்சி பெற்று வருகிறது.

அந்த வகையில் சீனாவின் தலைநகர் பீஜிங், வர்த்த தலைநகராக அறியப்படும் ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா தொற்றின் புதிய அலை பரவி வருகிறது. அங்கு நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் சீன அரசு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளதோடு தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. போராட்டத்தில் குதித்தனர் இந்த நிலையில் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தீயை அணைக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் இதனை மறுத்தனர். எனினும் கொரோனா கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி சின்ஜியாங் உய்குர் பிராந்தியத்திய மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளர்.

உரும்கி நகரில் நேற்று முன்தினம் இரவு மக்கள் சாலைகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டங்கள் அரிது சாலைகளில் போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை கீழே தள்ளிவிட்டு முன்னேறி சென்ற போராட்டக்காரர்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு கட்டுப்பாடுகளை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

சீனாவில் அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டங்கள் மிகவும் அரிது என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் கவனத்தை பெற்றுள்ளது.