அத்தியாவசிய பொருட்கள் உட்பட 400 பொருட்களின் விலை குறைப்பு?

முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாந்து தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் (23) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

நாட்டின் பிரதான மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் கையிருப்புகளை வெளியிடாமல் செயற்கையாகப் பதுக்கி கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிகளுக்குத் தட்டுப்பாட்டு நிலைமையைத் தோற்றுவித்திருப்பதாகவும், இந்த நிலைமையைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வர்த்தக சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் முறைமையொன்று வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சீனிக்கான அதியுச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருந்தொகையான சீனி இருப்புக்கள் பதுக்கப்பட்டிருப்பதாலும், இறக்குமதியாளர்கள் சீனி இறக்குமதியை இடைநிறுத்தியிருப்பதாலும் உள்ளூர் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாகக் கூறப்படுகிறது என்ற விடயத்தையும் அமைச்சர் தெரிவித்தார். சீனிக்கான இருப்பில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சீனிக்கான அதியுச்ச சில்லறை விலையை நீக்குவது குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார்.

அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்குவதில் லங்கா சதோச வெற்றிபெற்றிருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக 400 பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் நிறுவுனர் அமரர் கௌரவ லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியம் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை முன்னர் வழங்கியிருந்த உறுதிமொழிக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாகவும், இதற்கமைய 13.12.2023 முதல் 17.12.2023 வரையில் ஜாஎல மாநகரசபை மைதானத்தில் மஹாபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியம் மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.