அரசியலமைப்பு பேரவையின் இரு உறுப்பினர்கள் அரசியலமைப்பை மீறியுள்ளனர் – அலி சப்ரி

முக்கிய செய்திகள் 2

அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பு கோரப்படும்போது பேரவையின் உறுப்பினர்கள் முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் அல்லது எதிராக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பை தவிர்க்க முடியாது. பேரவையின் இரு உறுப்பினர்கள் அரசியலமைப்பை மீறி செயற்பட்டு அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளார்கள். இவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இறந்து பிறந்ததை போன்றே எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுகிறார்கள். 2017ஆம் ஆண்டு இவர்கள் அரசாங்கத்தில் இருந்தபோது மாகாண சபைத் தேர்தல் திருத்த முறைமையை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டு மக்களின் தேர்தல் உரிமையை பறித்தார்கள். இவர்களின் முறையற்ற செயற்பாடுகளினால் மாகாண சபைத் தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் இன்று இவர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களின் ஜனநாயக உரிமை பற்றி பேசுகிறார்கள்.

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு கட்டம் கட்டமாக தற்போது முன்னேற்றமடைகிறது. இந்த முன்னேற்றத்தை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு கடந்த காலங்களில் இவர்கள் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளார்கள்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் இயற்றப்பட்ட விதம், பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் சபாநாயகர் வாக்களித்த விதம் என்பனவற்றை பிரதான குற்றச்சாட்டுக்களாக எதிர்க்கட்சியினர் உள்ளக்கியுள்ளனர்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே சபாநாயகர் செயற்பட்டார்.சட்டமா அதிபரின் ஆலோசனைகள் தவறு என்று குறிப்பிட்டுக் கொண்டு பிறிதொரு நபரிடம் சட்ட ஆலோசனை சபாநாயகரால் கேட்க முடியாது.சட்டமா அதிபருக்கு அப்பாற்பட்டு ஆலோசனை கோருவதாக இருந்தால் பிரதம நீதியரசரிடமே ஆலோசனை கோர வேண்டும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதன் பின்னரே சபாநாயகர் சட்டத்தை சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்பின் பிரகாரம் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சான்றழித்ததன் பின்னர் சட்டத்துக்கு கைச்சாத்திடாமல் சபாநாயகரால் இருக்க முடியாது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் ஒருசில விடயங்களை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெகுவிரைவில் திருத்தச் சட்ட வரைவு சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

பொலிஸ்மா அதிபர் நியமனம் பற்றி பேசப்படுகிறது. அரசியலமைப்பு பேரவையில் ஒரு நியமனம் தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்படும்போது அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் அல்லது எதிராக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பை தவிர்க்கும் உரிமை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களுக்கு கிடையாது.

அரசியலமைப்பு பேரவையின் சட்ட வழிமுறைகளை நன்கு அறிந்த அதன் உறுப்பினர்கள் சட்டங்களை மீறியுள்ளார்கள். அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே இவர்களின் செயற்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆகவே சபாநாயகர் அரசியலமைப்பை மீறவில்லை. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டுக்காக சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்றார்.