மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

முக்கிய செய்திகள் 1

அனுராதபுரம் குற்றப்பிரிவு விசாரணைகளின் படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நால்வர் 116 மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், ஸ்ரவஸ்திபுர அலுத் வேவ, தம்புள்ளை கித்துல் திலாவ, மிரிஸ்கோனிய சந்தி மற்றும் ஹீன் மொரகொல்ல ஆகிய இடங்களில் 29 மற்றும் 44 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்கனை பஹல்மரகஹேவ பிரதேசத்தில் கற்றாழை பயிர்ச்செய்கை திட்ட தளத்தில் நேற்று இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பல்சர் ரக மோட்டார் சைக்கிள்கள் இரண்டு கடத்தப்பட்டமை தொடர்பிலான பல முக்கிய உண்மைகளை நீண்ட விசாரணையின் பின்னர் வெளிக்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் இசை கச்சேரி நடைபெறும் இடத்தில் மோட்டார் சைக்கிளை திருடி எடுத்துச் செல்லும் போது லொறியுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் மோட்டார் சைக்கிளை திருடிய பிரதான சந்தேக நபர், விற்பனைக்கு பங்களித்த இடைத்தரகர், மோட்டார் சைக்கிளை வாங்கியவர் மற்றும் மோட்டார் சைக்கிளை அகற்றி உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டவர் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.