மே மாத முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா எதிர்வரும் மே மாதம் 2 அல்லது 3ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஏற்கனவே ஜப்பான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி அவரது பதவிக்காலத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

அதன்போது கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அனைத்து கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த  கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் மேமாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ள அமைச்சர் யொகோ கமிகவா, மே மாதம் 4ஆம் திகதி இங்கிருந்து நேபாளத்துக்குப் பயணமாகவுள்ளார்.

அதன்படி ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, அவரது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்துவார் எனவும், இலங்கையின் பொருளாதார மீட்சி, கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.