தரமான அரிசியை வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பாளர் அறிவிப்பு!

முக்கிய செய்திகள் 2

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்குரிய தரமான அரிசியை வழங்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சமூக விவகாரங்களுக்கான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 3,408,076 குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான அரிசிப் பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 91 சதவீதமானோருக்கு அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரிசி விநியோகம் தொடர்பில் வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், சுகாதார திணைக்களங்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஊடாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி விநியோகிக்கப்பட்ட சுமார் 34 இலட்சம் அரிசி மூடைகளில், 11 அரிசி மூடைகளில் மட்டுமே பிரச்சினைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் காலாவதியான திகதியுடன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, குறித்த அரிசி விநியோகஸ்தரின் அரிசி விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மெதபிட்டிகம மற்றும் திக்வெல்ல ஆகிய கிராமங்களில் விநியோகிக்கப்பட்ட 7 அரிசி மூடைகளின் தரம் தொடர்பில் சிக்கல்கள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி மூடைகளையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் விசாரணைகள் முடியும் வரை அரிசி விநியோகத்திற்காக பணம் வழங்குவதை நிறுத்துமாறு திறைசேரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக விவகாரங்களுக்கான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.