மக்களை சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்பு கூறக் கூடிய அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

முக்கிய செய்திகள் 1

தேர்தல் ஆண்டில் உள்ள நாம் இம்முறையும் ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

பல வருடங்களாக, பல பாரதூரமான அவலங்களை எதிர்கொண்டு, நமது நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மே தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த பயங்கரமான அவலத்தில் எந்த மாற்றமும் இல்லாமலே, இந்த ஆண்டும் மே தினத்தையும் நமது நாட்டு தொழிலாளர்கள் தலைமையில் ஒட்டுமொத்த மக்களாலும் கொண்டாடப்படுகிறது. போலியான அலை ஊடாக திறமையற்றதொரு ஜனாதிபதியை பதவியில் அமர்த்தி நாடே வங்குரோத்து நிலைக்கு தள்ளியது.

எஞ்சியதை மக்கள் ஆணையை இழந்த நிழல் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் மே தினம் கொண்டாடப்படும் போதும் எமது நாட்டு உழைக்கும் மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு சற்றும் பொருந்தாத சம்பளத்தால் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கம் மிகவும் அவலம் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் தேசிய கடனை மறுசீரமைப்பதில் பெரும் செல்வந்தர்கள், நட்பு வட்டார நண்பர்களை தவிர்த்து உழைக்கும் மக்களின் சேமலாப நிதியங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை வார்த்தையால் சொல்லி முடிக்க முடியாது.

அவ்வாறே, நாட்டின் பொருளாதார இயக்கிகளான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்டு வருவதனால் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் கூட வாய் திறக்காத இத்தருணத்தில், நாட்டின் மாற்று அரசாங்கமாகிய நாம் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.

அப்போதிருந்து, இந்த பயங்கரமான சூழ்நிலையை நாங்கள் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நாங்கள் தொடர்ந்து எச்சரித்தோம், அது அனைத்தும் இன்று யதார்த்தமாகிவிட்டது. நாம் இப்போது தேர்தல் ஆண்டிற்கு வந்திருக்கிறோம். இம்முறையும் ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.

இதன் பிரகாரம், இந்த ஆண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களை ஒடுக்கும் இந்த பயங்கர அரசை விரட்டியடித்து மக்கள் சார், மக்களுக்காக அர்ப்பணித்துச் செயற்படும் அரசாங்கத்தையும், தலைவரையும் நியமித்து மீண்டும் ஒரு நாடாக எழுந்து நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இதனை அடையும் பொருட்டு, இன, மத, சாதி வேறுபாடின்றி நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிற்றேன். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ஒரு நாளில் மட்டும் அல்லாது வருடம் முழுவதும் பாதுகாக்க ஒன்றுபடுவோம்.