மெனிக்கின்ன வைத்தியசாலையில் மோதல்: 3 சிற்றூழியர்கள் தற்காலிக பணிநீக்கம்

முக்கிய செய்திகள் 1

மெனிக்கின்ன வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள மோதல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிற்றூழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்ய மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள துடன் விசாரணை அறிக்கைகள் கிடைக்கும் வரை அவர்களினது சேவையினை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.

மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் உள்ளிட்ட ஊழியர்கள் வைத்தியசாலை வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்துவதற்கு மாகாண சுகாதார அதிகாரிகளிடம் முறையான அனுமதியைப் பெறவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மூவரையும் தெல்தெனிய நீதவான் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.

மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிற்றுழியர்கள் மூவரும் கண்டி பதில் நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மெனிக்கின்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெனிக்கின்ன வைத்தியசாலை வளாகத்தில் இருதரப்பினர்களுக்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இரவு ஏற்பட்டுள்ள மோதலில் ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.