அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: கல்லூரி மாணவர்கள் மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

லாஸ்ஏஞ்செல்ஸ்:02

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும், காசா போரை உடனே நிறுத்த வேண்டும் எனக்கோரியும் அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி அவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் நகர கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் கூடாரங்களை அகற்றி மாணவர்களை அங்கிருந்து ஒரே இரவில் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்கலைக்கழகத்தில் திடீரென புகுந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் மாணவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அகற்றி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பல்கலைக்கழகம் கலவர பூமியாக மாறியது. இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. மோதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது அந்நாட்டு போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.