நிலங்களுக்காக மக்களை போராடுகின்ற நிலைமைக்கு தள்ளியவர்கள் கூட்டமைப்பினரே: ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

நல்லாட்சி அரசில் தனியார் நிலங்களை சுவீகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றில் முழுமையாக ஆதரவளித்த இலங்கை தமிழரசுக் கட்சி, தற்போது தனது மேதினக் கூட்டத்தில் நாங்கள் தொழிலாளர்களுக்காக மட்டுமல்ல நிலத்தை பாதுகாப்பதற்காகவும் கூடியிருக்கின்றோம் என அக்கட்சியின் தலைவர் தலைவர் மாவை சேனாதிராசா அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்

நல்லாட்சி என்ற அரசில் மைத்திரி அரசாங்கத்தில் துறைசார் அமைச்சில் அமைச்சராக இருந்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொல்பொருள் திணைக்களத்தினூடாக தமிழர் தாயக பூர்வீக பிரதேசங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுவீகரிப்புக்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மசோதாவை சமர்ப்பித்து நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தது.

அதன்காரணமாக வடக்கு கிழக்கில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் போன்றவை பல தனியார் நிலங்களை தம்வசப்படுத்திக் கொண்டன.

அன்றைய காலத்தில் அரசுடன் தேனிலவில் மிதந்த இவர்கள் தமிழர்களுக்கும் தேசத்திற்கும் ஆபத்து ஏற்பட்டிருந்ததை அறியவில்லையா?
தற்போது தாம் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல நிலத்தையும் பாதுகாக்க கூடியிருக்கின்றோம் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இன்று இவ்வாறன அரச திணைக்களங்களால் முல்லைத்தீவு கரியவயல் பகுதியில் 130 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் தமது வாழ்விடங்களையும் வயல் நிலங்களையும் விவசாய பூமியையும் மீட்பதற்காக நீதிமன்றத்திற்கு அலைந்தவண்ணம் உள்ளனர்.

இவற்றை எல்லாம் தோற்றுவித்தவர்கள் கூட்டமைப்பினரே அன்றி வேறு யாரும் அல்ல.

அன்று கோடரிக்காம்பாக செயற்பட்ட கூட்டமைப்பு இன்று சிதைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்ல எமது மக்கள் நிலங்களுக்காக போராடுகின்ற நிலைமையை உருவாக்கியவர்கள் கூட்டமைப்பினரே என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.