இலங்கையில் பிரம்மாண்ட கைத்தொழில் கண்காட்சி: ரமேஷ் பத்திரண

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையின் உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தைகளில் கேள்வியை அதிகரித்துக்கொள்வதற்காக பிரம்மாண்ட சர்வதேச கைத்தொழில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தி கைத்தொழில் முயற்சியாளர்களின் பங்கேற்புடன் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூன் 19 - 23 வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

'இன்டஸ்ட்ரி எக்ஸ்போ 2024' கண்காட்சியில் 25 கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர்.

புதிய உற்பத்திகள் தொடர்பில் பிரத்தியேக பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு தூதரங்கள், வணிக திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. பெருமளவான வெளிநாட்டவர்கள் இதில் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

கண்காட்சியை முன்னிட்டு ஜூன் 18ஆம் திகதி காலி முகத்திடலிலிருந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் வரை விசேட வாகனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அத்தோடு ஜூன் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் 'நிலையான தொழில் வளர்ச்சிக்கான பசுமை தொழில் முயற்சி' எனும் தொனிப்பொருளில் முதலாவது சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளதோடு, விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது என்றார்.