புகையிரதங்களில் மோதி 103 காட்டு யானைகள் உயிரிழப்பு

முக்கிய செய்திகள் 2

2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன. காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் புகையிரத திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 103 காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய புகையிரத திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு ஒன்றிணைந்து புகையிரத பாதைகளில் காட்டு யானைகள் பயணம் செய்யும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இந்த பகுதிகளை விசேட பாதுகாப்பு பகுதிகளாகவும்,கண்காணிப்பு பகுதிகளுக்காகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகள் கடக்கும் பகுதிகள் குறித்து புகையிரத சாரதிகளுக்கு தெளிவுபடுத்தவும்,புகையிரத பாதைகளில் வளைவு பகுதிகளைக் காட்டு யானைகள் கடக்கும் போது அவைகளை முன்கூட்டியே அவதானிக்கும் வகையில் விசேட இயந்திரங்கள் பொருத்துவதற்கும்,புகையிரத பாதை வளைவுகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.