பொருளாதார நிலையில் முன்னேறவில்லை – ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டு மக்களின் பொருளாதார நிலை தொடர்பில் திருப்தியடைய முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிராம சக்தி தேசிய செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வறுமை தொடர்பான எமது நாட்டின் புள்ளிவிபரங்களுக்கமைய, ஏழு சதவீதமானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருக்கின்ற போதிலும், அரச, தனியார் துறை சேவையிலுள்ள கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோரின் பொருளாதார நிலை என்ன என்பது எமக்குத் தெரியும். இவற்றைவிடவும் பல்வேறு மட்டங்களில் வாழ்வோரின் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது திருப்திப்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் சமகால தேவையான தேசிய ரீதியில் எம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகளை நிறைவேற்றும் கிராம சக்தி மக்கள் செயற்றிட்டத்துக்காக, அனைவரும் வருகை தந்திருப்பது தன்னைப் பலப்படுத்தும் மகிழ்ச்சியூட்டும் விடயம் என்றும், அனைத்து மக்களினதும் அபிவிருத்திக்காக சமூக நியாயத்துடன் அனைத்து மனிதர்களையும் வறுமை மற்றும் பட்டினியின்றி வாழ்வதற்கு இவ்வாறான திட்டமொன்றின் தேவை பலமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்காக வசதி வழங்கும் கொள்கையிலிருந்து விடுபட்டு, வறுமையில் வாடும் மக்களை மீட்டெடுப்பதற்கான வசதிகளை அவர்களுக்கு வழங்கி, தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பும் கடமையுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.