இன்று காணி விடுவிப்பு தொடர்பிலான கூட்டம்

செய்திகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது சம்மந்தமான கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் வட மாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புதரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது குறித்த மாவட்டங்களில் விடுவிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கான ஆளுனர் தலைமையிலான கூட்டம் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.

மன்னார் மாவட்டம் தொடர்பான கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருடத்துக்குள் விடுவிக்க, அந்தந்த மாகாண ஆளுனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி பணித்துள்ளது.

மாகாண சபைகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த கூட்டம் ஒன்று நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்திருப்பதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.