ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தல்: 16 பேர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கை பிரஜை ஒருவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்ட 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 228 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா அதிகளவில் கடத்தப்படும் நிலையில், அதனை தடுப்பதற்காக மதுவிலக்கு அமுலாக்க பிரிவினால் தனிப்படை அமைத்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 28 ஆம் திகதி மாலை தூத்துக்குடி – புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் 2 கார்களில் 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான 228 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு கார்களிலும் பயணித்த இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து, மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் கஞ்சா கடத்தல் சம்பவங்களின் மூளையாக செயற்பட்டுள்ளதாக The Hindu செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை – நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இலங்கையர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் சட்டக்கல்லூரி மாணவி ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 15 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டுப்படகு மூலம் தனுஷ்கோடி வழியாக கடத்தப்பட்ட தங்கத்தை கீழக்கரை அருகே சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த தங்கம் ராமநாதபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 8.25 கோடி இந்திய ரூபா பெறுமதியானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.