இணையத்தில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்கும் வழிமுறைமை ஜனாதிபதியால் அறிமுகம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை சிக்கிக்கொள்ளக்கூடிய இணைய பக்கங்கள், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள் பெருமளவில் சைபர் வலையமைப்பிற்குள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய ராஜ்ஜியத்தின் Internet Watch Foundation – IWF உடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு, Save the Children & Child அதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது.

இந்த இணைய வழி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் www.childprotection.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவியுடன் IWF நிறுவனத்திடம் முறைபாடு செய்யலாம். பின்னர் குறித்த நிறுவனத்தினால் காணொலிகள் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு 011 – 2 778911 இலக்கத்திற்கு சட்ட செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ள 269 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் www.childprotection.gov.lk என்ற உத்தியோபூர்வ இணையத்தள பக்கத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் அறிந்துகொள்ள முடியும்.

மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க மற்றும் சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

மேற்படி குழுவின் அறிக்கை ஒக்டோபர் 2023 இல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பல தரப்பினருடனும் ஆலோசித்து சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குறுகிய கால, இடைக் கால, நீண்ட கால தீர்வுகளுக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான இடைக்கால பரிந்துரைகளை செயற்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிரச்சினைகளின் தன்மைக்கு அமைவாக முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தினை 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சிறுவர் பாதுகாப்பு குறித்து இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் கவனம் செலுத்தாமல் இருந்தமையும் மிகப்பெரிய பிரச்சினையாகியுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருந்தாலும், சிறுவர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேற்படி குழுவின் அறிக்கையை விரைவில் செயற்படுத்த வேண்டியது அவசியமெனவும், அதற்காக அமைச்சு, பொலிஸ், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சீர்த்திருத்த நிலையங்களின் அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவொன்றை நிறுவுமாறு அறிவுறுத்தியிருப்பதாகவும், சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புக்கான புதிய சட்டமூலங்களை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உரிய அமைச்சுக்களின் அதிகாரிகள், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னம், சொலிசிட்டர் ஜெனரல் அயேசா பியசேன,பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதானிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.