நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

முக்கிய செய்திகள் 3

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கிச் செல்வதற்கு இன்று (16) முறையான ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக நானுஓயா ரயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமித்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைதருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவிக்கு வருகை தருவதற்காகப் புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.

நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களிலிருந்து பதுளை எல்ல பகுதியை நோக்கி செல்வதற்காக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .