பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணி: அரவிந்தகுமார்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர் கொண்டுள்ள காணிப் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கும் காணிப்பற்றாக்குறையோடு இயங்கிவரும் மலையகத்தின் அனைத்து பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய அசெளகரியங்களைக் களைவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஊவா பரணகமை பிரதேசத்தில் இடம்பெற்ற குறை வருமானம் கொண்டோருக்கான இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்நிலைமைகள் எடுத்துரைக்கப்பட்டதன் பின்னரே அவர் மேற்கண்டவாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பதும் சேறுபூசுவதும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகும். எதிர்க்கட்சிகள் எத்தகைய அரசியல் நிகழ்ச்சி நிரலில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டாலும் அரசாங்கமானது நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதுமான பொறுப்புக்களில் இருந்து விலகிவிட முடியாது.

அந்த வகையிலேயே அஸ்வெசும திட்டம் நிவாரண நிதித்திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டது. அதன் வரிசையிலேயே தற்போது குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை தெரிவு செய்து இரண்டு மாதங்களுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்து அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கின்றனர். மக்கள் ஆணை இல்லாத நிலையில் தான் அவர் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து எதிர்கால சந்ததிக்கான நாட்டை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகிறார். ஆகவே அவருக்கான அங்கீகாரத்தையும் ஆணையையும் வழங்கவேண்டியது நாட்டு மக்களின் நன்றி கலந்த கடமையாகும்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊவா பரணகம பிரதேசத்தில் இடம்பெற்ற குறைந்த வருமானம் கொண்டோருக்கான இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் அவரை சந்தித்து மலையக பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்தேன்.

குறிப்பாக 1977 மற்றும் 1980 களில் பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றபோது தோட்ட நிர்வாகங்கள் காணிகளை வழங்க மறுத்து விட்டன. இந்நிலையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் இரண்டு ஏக்கர் காணி வீதம் வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரவைப் பத்திரம் வர்த்தமானி ஊடாக வெளிவராத காரணத்தால் காணி கிடைப்பதில் இழுபறி நிலை நிலவி வருகின்றது.

இதனால் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் அதிபர், ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

மலையகத்தில் 873 பாடசாலைகள் இயங்கிவருகின்ற நிலையில் அவை பூரணத்துவமான வசதிகளையோ உட்கட்டமைப்புக்களையோ கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான பாடசாலைகளுக்கு சொந்தமான காணிகளுக்கு உறுதிகள் இல்லாத காரணத்தால் அந்த காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

இவை மாத்திரமன்றி அத்தியாவசிய குறைபாடுகளால் அசெளகரிய நிலைமைகளை மலையக பாடசாலை சமூகத்தினர் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த காரணிகள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்தேன். இவ்விடயங்களை உள்வாங்கிய அவர், பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர் கொண்டுவரும் காணிப் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கும் காணிப் பற்றாக்குறையோடு இயங்கிவரும் மலையகத்தின் அனைத்து பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய அசெளகரியங்களைக் களைவதற்கும் இணக்கத்தை தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பில் சடுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.