இடைக்கால வரைபை வைத்து மக்களைக் குழப்பாதிருக்க தீர்மானம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளதாகவும், இடைக்கால வரைவை வைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பக்கூடாதென தமிழரசுக் கட்சியின் விஷேட மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விஷேட கூட்டம், வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், குறித்த கூட்டத்தில், அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட்டதாகவும், இடைக்கால அறிக்கையே, தற்போது வெளிவந்துள்ளது. இதன்பிரகாரம், வர இருக்கின்ற இறுதி வரைவில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரைவை வைத்து மக்களைக் குழப்பாமல், அரசமைப்புக்கான முழுமையான வடிவம் வந்ததன் பின்னரேதான், மக்களுக்கு உண்மை விடயங்களைச் சொல்ல முடியும் என்பது தொடர்பாக, கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி, அதனோடு இணைந்திருக்கக் கூடிய பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைகளையும், மத்தியகுழு உறுப்பினர்கள் முன்வைத்துள்ளதாகவும் ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தமிழரசுக் கட்சி எத்தனிக்கின்ற போதிலும், அதன் பங்காளிகள் கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று புதிய கூட்டணியொன்றை ஒருவாக்குவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்ற நிலையே காணப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, தமிழ் மக்கள் மத்தியில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தயாராகி வருகின்றமையை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.