ஜனாதிபதியின் நடவடிக்கையால் யாழில் மக்கள் கவலை (Photos)

சிறப்புச் செய்திகள் செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் காலை 8.30 மணியளவில் இந்தப் போராட்டம் யாழ். பிரதான வீதி சென் சார்ள்ஸ் வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியில் நடைபெற்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, பாதர் பிரான்சிஸ் யோசப் உட்பட பல உறவுகள் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் தமது உறவுகளினால் கையளிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு கையளிக்கப்பட்ட உறவுகள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, நடைபெற்ற விசாரணைக் குழுக்களின் முடிவு எங்கே? துமிழ் பிரதிநிதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் கைபொம்மைகளா? இன்னும் கால அவகாசம் தேவையா? 2009-2018 தீர்வு எங்கே? தமிழரை ஏமாற்றாதே! இலங்கை அரசே ஐ.நா சபையை ஏமாற்றாதே? ஓ.எம்.பி. விசாரணைக்குழு எதற்கு? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஜனாதிபதியின் வருகையை எதிர்த்துப் போராட்டம் நடாத்திய நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட வேளையில், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தடுத்தி நிறுத்தியதுடன், போராட்டக்காரர்களை நகரவிடாது தடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஜனாதிபதி செல்லாது, நிகழ்வில் கலந்துகொண்டமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சலிப்படைந்த போதிலும், தமது போராட்டத்தினை கைவிடாது தொடர்ந்திருந்தனர்.