அரசியலுக்குள் வருமாறு பெண்களை அழைக்கும் அனோமா கமகே!

செய்திகள்

எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் பெண்கள் பங்கெடுத்து அரசியலுக்குள் வாருங்கள்,  நான் வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சருமான அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் நேற்று (23.07.2017) இடம்பெற்ற மகளிர் அமைப்பின் 13 ஆவது வருட நிறைவு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதெ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர்  தொடர்ந்து உரையாற்றுகையல், ”பெண்களை வலுவற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்ற ரீதியில் ஒரு வகையான குறை மதிப்பு மனப்பாங்கு இருந்த போதிலும் பெண்கள் வீட்டு நிருவாகத்தில் தொடங்கி நாட்டு நிருவாகம் வரை அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டியுள்ளது.

மனப்பாங்குகள் எவ்வாறு இருந்தபோதிலும் இந்த நாட்டின் அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு அபாரமானது. பெண்களுக்கு சுய தொழில்களை மேற்கொள்ள எமது அரசு பல வகைகளில் உதவி வருகின்றது.

உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை ஒரு சிறந்த வாய்ப்பாக பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் பெண்கள் பங்கெடுத்து அரசியலுக்குள் வாருங்கள் என்று நான் வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்கின்றேன்.” என்றார்.